கருணாநிதி அறிக்கை ஏமாற்று வேலை! மீனவர் மசோதாவை முழுமையாக நிராகரிக்க வேண்டும் - வைகோ
கருணாநிதி அறிக்கை ஏமாற்று வேலை!
மீனவர் மசோதாவை முழுமையாக நிராகரிக்க வேண்டும்!
கடல்சார் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை மேலாண்மை மசோதா குறித்து, முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டு உள்ள அறிக்கை, மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக, இந்திய மீனவர்களுக்கு எதிராக மேற்கொண்ட அக்கிரமமான முயற்சிகளை மூடி மறைத்து, மீனவ சமுதாய மக்களை ஏமாற்றுகின்ற, பித்தலாட்ட அறிக்கை ஆகும்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், ஜனநாயகத்துக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான, அடக்குமுறை மசோதாக்கள், பல காலகட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில், தற்போது மத்திய அரசு, உத்தேசித்த, இந்த மீன்பிடித்தொழில் மசோதாவைப் போன்ற, கொடூரமான தீங்கு விளைவிக்கும், மசோதா இதுவரை, முன்வைக்கப்பட்டது இல்லை.
இந்த மசோதாவின் ஒவ்வொரு வரியும், வார்த்தையும், கோடிக்கணக்கான மீனவ மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும், அடியோடு நாசமாக்குகின்ற, மீனவ மக்களை, வதைத்து, நசுக்குகின்ற மசோதா ஆகும்.
12 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன்பிடித்தால், 9 லட்சம் அபராதம், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும்;
பத்தாயிரம் ரூபாய் மதிப்புக்கு அதிகமாக மீன்பிடித்தால் 25,000 ரூபாய் அபராதம் என்றும்; மீன்பிடிப் படகுகளில் சோதனையிடும்போது மீனவர்கள் தடுக்க முயன்றால், ரூ பத்து இலட்சம் அபராதம், ஓராண்டு சிறைத்தண்டனை என்றும், இம்மசோதா மீனவர்களை மிரட்டுகிறது.
எந்த வகை வலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் மீனவர்களுக்கு உரிமை கிடையாது, கடலுக்கு உள்ளே, மீன்வளம் காண்பதற்குக்கூட, மீனவர்கள், ஆய்வு செய்ய அனுமதிக்கவும் தடை என்று இம்மசோதா விஷத்தைக் கக்குகிறது.
இது, குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட வேண்டிய மசோதா ஆகும்.
இந்திய குற்றவியல் சட்டப்படி, கொலை செய்வது மட்டும் அல்ல; கொலை செய்ய முற்படுவதும் குற்றம் ஆகும்.
கோடிக்கணக்கான மக்களை, மனிதர்களாகக் கூட எண்ணிப் பார்க்காமல், ஆயிரமாயிரமாக ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த வாழ்வு உரிமையைக் காலில் போட்டு மிதித்து விட்டு, பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளின் கொள்ளைக்கு, நமது கடலைப் பலியிடுகிற இந்த முயற்சியில் ஈடுபட்ட, குற்றவாளிதான் மத்திய அரசு என்பதால், இப்படி மீனவர்களை வதைக்க முற்பட்டதற்கு, மத்திய அரசுக்கு என்ன தண்டனை கொடுப்பது? என்பதுதான், நியாயமான கேள்வி ஆகும்.
இந்த மசோதாவைக் கொண்டு வர முற்பட்ட குற்றத்துக்கு, மத்திய அரசு பொறுப்பாளி என்பதால், அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
நாடெங்கும், குறிப்பாகத் தமிழகத்தில், மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் ஒரு கோடி மக்களின் கோபத்துக்கும், வெறுப்புக்கும், கடுமையான எதிர்ப்புக்கும் மத்திய அரசு ஆளாகிவிட்டதால், மீனவ மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு கண்துடைப்பு வேலையாக, மத்திய அமைச்சர் சரத் பவார், இதுபற்றிச் சொன்ன அபத்தமான கருத்துகளை, கலைஞர் கருணாநிதி அறிக்கையாகத் தந்து இருக்கிறார்.
மீனவர்களுக்குக் கொடுந் தீங்கு விளைவிக்கும், இந்தச் சட்ட முன்வரைவை நான் பார்க்கவே இல்லை என்றும், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்து, ஆலோசனைகள் செய்து முடிவு எடுக்கப்படும் என்றும், தற்போது உடனடியாக நாடாளுமன்றத்தில் இது நிறைவேற்றப்படாது என்றும் கூறி உள்ளதாக, முதல் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இந்த மசோதாவையே நான் பார்க்கவில்லை என்று ஒரு மத்திய அமைச்சர் சொல்வதில் இருந்து, மீனவர்களின் உள்ளத்தை எரிமலை ஆக்கும் இந்தக் கடுமையான பிரச்சினையை, எவ்வளவு அலட்சியமாக, உதாசீனப்படுத்தி, மீனவர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணி, மத்திய அமைச்சர் கூறி உள்ளார்?
இந்த மசோதாவை, முழுமையாக நிராகரிக்க வேண்டும். முயற்சிகளை அடியோடு கைவிட வேண்டும் என்று முதல் அமைச்சர், ஏன் மத்திய அரசை தொடக்கத்திலேயே வற்புறுத்தவில்லை?
இந்த மசோதாவில், விவாதிப்பதற்கோ ஆலோசிப்பதற்கோ எந்த ஒரு பிரிவையும், ஏற்பதற்கோ, தகுதியே கிடையாது.
இடைத்தேர்தலை மனதில் கருதி, மீனவ மக்களை ஏமாற்றுவதற்காகவே, முதல் அமைச்சர் இப்படி அறிக்கை தந்து உள்ளார்.
மீனவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைக்க முயற்சித்த மத்திய அரசைக் கண்டிக்கவும், முயற்சியை அடியோடு கைவிடுமாறு எச்சரிக்கை செய்யவும், டிசம்பர் 18 தலைநகர் தில்லியில், அண்ணா தி.மு.க. நடத்த இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கு ஏற்கும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்கள் அதில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக